இந்திய-சீன எல்லை பிரச்சனை.. பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..!!

இந்திய- சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.

டெல்லி, ஜூன்-19

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து இந்திய – சீன எல்லை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்தன.

இந்நிலையில், இந்திய- சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்.

எதிர்கட்சித் தரப்பில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சிவசேனா தரப்பில் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தின் தொடக்கத்தில், லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் லடாக் எல்லைப்பகுதியில் தற்போது நிலவக்கூடிய சூழல்கள், கடந்த 15, 16ம் தேதிகளில் ஏற்பட்ட மோதலில் எந்த மாதிரியான சூழல் நிலவியது தொடர்பாக மத்திய அரசு சார்பில் எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் தூதரக ரீதியில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம் அளிக்க உள்ளார்.

இதனையடுத்து ராணுவ ரீதியில் எல்லைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க உள்ள நிலையில் மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்க உள்ளார். எதிர்க்கட்சிகள், இவை அனைத்தையும் ஆராய்ந்து ஆலோசனை நடத்திய பிறகு தங்களுடைய கருத்துக்களையும் மத்திய அரசிடம் தெரிவித்து லடாக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து ஓர் விரிவான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *