எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி.. புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் 10,11ம் வகுப்பு மாணவர்கள்..!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.

சென்னை, ஜூன்-19

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேடுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன.

இதற்காக மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனுப்பும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாலும், சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பதாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.

இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதேபோல் 11ம் வகுப்பிலும் வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும்புவியியல் பாடங்களில், காலாண்டு அரையாண்டில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கும்படி மாவட்ட முன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *