தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ஜூன்-19

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 70 ஆகவும் அதிகரித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *