அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு… வெளியே சுற்றினால் கைது, வாகனங்கள் பறிமுதல்..!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வாகனங்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை, ஜூன்-19

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் கட்டுக்கடங்காமல் கொரோனாவின் தாக்கமும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால், வைரசை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமுல்படுத்தப்பட உள்ளன. வழக்கத்தை விட இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்கும்படி அரசு சார்பில் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 288 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நள்ளிரவு முதல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அண்ணாசாலை, ஈவெரா சாலை, காமராஜர் சாலைகள் நேற்று நள்ளிரவே மூடி சீல் வைக்கப்பட்டன. சாலைகளில் பல்வேறு இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.

மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மாவட்ட போலீசார் மாவட்ட எல்லைகள் மற்றும் பிரதான சாலைகளில் 14 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த பணியில் மொத்தம் 18 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 21, 28ம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ பயன்பாட்டு வாகனங்களை தவிர்த்து எந்த வாகனங்களும் இயங்க அனுமதி இல்லை. அதையும் மீறி வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முழு ஊரடங்கை யொட்டி சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனாவை தடுக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னையில் தீவிரமாக அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சரும், அரசும் அறிவித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பொருட்களை வாங்க வாகனங்களில் செல்லக்கூடாது. அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். மீறி வாகனங்களில் சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

பணிக்கு செல்லும் 33 சதவீத மத்திய-மாநில அரசு ஊழியர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டால் நல்லது.

வெளியூர் செல்ல கண்டிப்பாக ‘இ-பாஸ்’ வாங்க வேண்டும். பழைய ‘இ-பாஸ்’ வைத்திருப்பவர்கள் அதை முறையாக புதுப்பித்து பயன்படுத்தி கொள்ளலாம். போலியாக ‘இ-பாஸ்’ தயாரித்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் அண்ணாசாலை போன்ற முக்கியமான சாலைகள் ஊரடங்கையொட்டி மூடப்படும். அந்த சாலைகளில் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். காமராஜர் சாலை போன்ற ஒரு சில சாலைகளில் கடந்த முறை மேற்கொண்ட நடைமுறை பின்பற்றப்படும். பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ‘டிரோன் கேமராக்கள்’ பயன்படுத்தப்படும்.

சென்னை நகர எல்லையை தாண்டி பணிக்கு செல்லும் ஊழியர்கள் தினசரி சென்றுவர அனுமதி இல்லை. வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவர்கள் தங்கிக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவன காவலாளிகள் உரிய சீருடை அணிந்து சென்றால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *