பள்ளிகளில் விடைத்தாள் இல்லை.. 10, 11ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடரும் சிக்கல்

பெரும்பாலான பள்ளிகளில் விடைத்தாள்கள் இல்லாத நிலையில், 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை தீர்மானிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னை, ஜூன்-18

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாணவர்களின் வருகை பதிவேடு, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனுப்பும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. விடைத்தாள்கள் இல்லாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதற்கான விதிமுறைகள் வெளியிடப்படாததால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் சிக்கல் தொடர்கிறது.

இதற்கிடையே விடைத்தாள்களை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் பள்ளிகள், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அவசர அவசரமாக மீண்டும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுத வைத்து, விருப்பம்போல மதிப்பெண்களை வழங்கி, விடைத்தாள்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள் சேகரிப்பு மற்றும் அவற்றை ஒப்படைக்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *