ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்?… ராகுல் கேள்வி

சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி, ஜூன்-18

இந்தியா-சீன எல்லையில் சுமார் 6 வாரங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா – சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி நாளை அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *