வட்டிக்கு வட்டியா?.. வங்கிகளே முடிவுசெய்யும் வகையில் அரசு விட்டுவிடக்கூடாது – உச்சநீதிமன்றம்

கொரோனா பாதிப்பு காலத்தில், வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. மேலும், அனைத்து விஷயங்களையும் வங்கிகளே முடிவுசெய்யும் வகையில் அரசு விட்டுவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி, ஜூன்-17

பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27ல் புதிய சலுகை ஒன்றை அறிவித்தது. அதன்படி வங்கியில் கடன் பெற்றவர்கள் கடந்த மார்ச் முதல் மே வரையில் 3 மாதம் தவணையை காலம் தாழ்த்தி செலுத்தலாம் என தெரிவித்தது. கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தாத இந்த காலம் சிபிலில் சேர்க்கப்படாது எனவும் கூறப்பட்டது. இதனால் வங்கிகளில் கடன் பெற்ற பலரும் தவணை ஒத்திவைப்பு சலுகையை பயன்படுத்தினர்.

ஆனால் வங்கிகளோ, தவனை ஒத்திவைப்பு காலத்துக்கும் ஒரு வட்டியை வசூலிப்போம் என நடவடிக்கை மேற்கொண்டது. இது வங்கி கடன் பெற்றவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, ஆஜரான பாரத ஸ்டேட் வங்கி தரப்பு, தவணைத் தொகைக்கு வட்டி விதிப்பதை தவிர்க்க முடியாது என வாதிட்டது. இதற்கு தவணைத் தொகைக்கு வட்டி விதிப்பதை பற்றி பேசவில்லை; கூடுதல் வட்டி குறித்தே கவலை கொள்கிறோம் என்று பதில் நீதிபதிகள் பதில் அளித்தனர்.

மேலும் நீதிபதிகள், ‘கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடவில்லை. ஆனால் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்பட்டுள்ளதுதான் கவலை அளிக்கிறது’ என்றனர். மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு மாத தவணைத் தொகைக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய பரிசீலிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 17- ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா பாதிப்பு காலத்தில், வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

மேலும், அனைத்து விஷயங்களையும் வங்கிகளே முடிவுசெய்யும் வகையில் அரசு விட்டுவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கடனை தாமதமாக செலுத்தும் விஷயத்தில் வட்டி தள்ளுபடியானது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதிக்கும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதற்கு நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *