இந்தியா – சீனா எல்லை பிரச்சனை.. அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு…!

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக, வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி, ஜூன்-17

இந்தியா – சீனா இடையே எல்லையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை மோதலைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், தலைமை தளபதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க, வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் 19-ம்தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதாகவும். காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *