‘நிழல் நிஜமாகிவிடாது’.. “இணைய வழிக்கல்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு..!

“‘இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை;
‘நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்;
மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடித்து விடக்கூடாது” என திமுக தலைவரு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-17

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு ;-

“இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசு, திரைமறைவில் அந்த வகுப்புகளைத் தாராளமாக அனுமதிக்கும் உள்நோக்கத்துடன் ஒரு குழுவை நியமித்து- அதில் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், மாணவர் பிரதிநிதிகளையும் புறக்கணித்திருக்கிறது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கிள்ளுக் கீரையாக எண்ணி, மனம் போன போக்கில் விளையாடும் அ.தி.மு.க. அரசின் இந்தச் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, “ஸ்மார்ட் போன்” போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், “வை-ஃபை” மற்றும் “பிராட்பேண்ட்” வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. குறிப்பாகக் கிராமங்களில் இந்த வசதிகள் கிடைப்பதே மிகவும் அரிது. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2017-18 அறிக்கையில், “கிராமப்புறங்களில் உள்ள 4.4 சதவீத வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன” என்றும்; “கிராமப்புறங்களில் 14.9 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் 42 சதவீதம் பேருக்கும் மட்டுமே இணையதள வசதி இருக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், “மடிக்கணினிகளை 11 சதவீதம் பேரும், ஸ்மார்ட் போனை 24 சதவீதம் பேரும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” என்றும் அந்த அறிக்கை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் – நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும் பேராபத்தானது!

2020-2021-ம் கல்வியாண்டிற்குரிய பாடத்திட்டங்கள் குறித்துப் பரிந்துரைக்க அ.தி.மு.க. அரசு அமைத்துள்ள குழு இன்னும் தனது அறிக்கையை அளிக்கவில்லை. அக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டங்களுக்குத் தேவையான இணையவழிப் பொருளடக்கங்கள் என்ன? அந்தப் பொருளடக்கம் உள்ள மென்பொருள் உட்கட்டமைப்பு தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளில் இருக்கிறதா என்பதும் ஆய்வு செய்யப்படவில்லை. கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன், தமிழ்நாட்டில் 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு, “கையடக்க மடிக்கணினி” (TAB) வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுவரை அதுவும் நடைபெறவில்லை. அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ள “கல்வித் தொலைக்காட்சி” இணைப்பு இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தொலைக்காட்சி அனைத்து இல்லங்களிலும் தெரியுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆகவே இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு அடிப்படைக் கட்டமைப்பு அரசிடமும் இல்லை – மாணவர்களுக்கும் அத்தகைய வசதிகள் வழங்கப்படாத நிலையில், இதுபோன்ற ஒரு விஷப்பரீட்சையை ஏன் அரசு நடத்த விரும்புகிறது?

அனைத்துப் பகுதிகளிலும் “டிஜிட்டல் முன்னேற்றம்” இல்லாத சூழலில், ஆசிரியர் இல்லாமல் பாடம் எடுக்க முடியாது. மாணவர் கேள்வி கேட்காமலோ அல்லது ஆசிரியருடன் நேரடியாகக் கலந்துரையாடல் செய்யாமலோ கற்றுக்கொள்ள முடியாது. “வகுப்பறைகளில் கல்வியின் தரம்” என்பது மிக முக்கியம் என்பது பல்வேறு தேசிய கல்விக் கொள்கைகள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் – அந்தத் தேசியக் கல்விக் கொள்கைகளுக்கு எதிராகவே மத்திய அரசு “இணையவழி வகுப்புகளை நடத்தலாம்” என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துவது, களநிலவரங்கள் குறித்த அறியாமை. மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலும், அதை “சிரமேற்கொண்டு” காவடி ஆடி, கடைப்பிடிக்கத் துடிக்கும் அடிமை அ.தி.மு.க. அரசும், “தரம் மிகுந்த கல்வி” என்ற தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிராக நடக்கின்றன என்று நடுநிலையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். “கல்வி என்பது கற்றறிய வேண்டியது. அது ஏதோ பங்குச் சந்தை வியாபாரம் போன்றதும் அல்ல; டெண்டர் பேரமும் அல்ல ” என்பதை மத்திய – மாநில அரசுகள் உணர வேண்டும். பரஸ்பர ஆசிரியர் – மாணவர் கலந்துரையாடல் மூலம் உருவாக்கப்படும் கல்விதான் இந்நாட்டின் மிக முக்கியமான சொத்து!

கல்வியின் தரம் ஒருபுறமிருக்க, இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் அலைபேசித் திரை அல்லது மடிக்கணினித் திரையைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வையில் குறைபாடுகள் நேரலாம். ஊரடங்கால் வேலையை இழந்து – வருமானத்தை இழந்து – வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து, வாட்டத்தில் இருக்கும் பெற்றோருக்கு, தாங்க முடியாத நிதிச்சுமையாக இணையவழிக் கல்வி நெருக்கடியைத் தரும். சுருக்கமாக, இது மத்திய பா.ஜ.க. அரசின் “பணமதிப்பிழப்பு நடவடிக்கை பாதிப்பை” விட, இரட்டிப்பு பாதிப்பை எதிர்காலச் சமுதாயமான மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடும்.

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வையும் பாகுபாடுகளையும் உருவாக்கி- மாணவர் சமுதாயத்திடையே பள்ளிகளில் நிலவிவரும் சமநிலையைச் சரித்துச் சாய்க்கும் இந்த இணையவழிக் கல்வி, வேற்றுமை மனப்பான்மையைப் பிஞ்சு உள்ளங்களிலேயே நஞ்சாகப் புகுத்திவிடும். இது மாணவர் சமுதாயத்திற்கு மாபாதகத்தை ஏற்படுத்தும் என்பதை அ.தி.மு.க. அரசு மட்டுமல்ல – இதனைப் பரிந்துரைத்து – உயர்நீதிமன்றத்திலும் ஆதரவாக வாதாடிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இணையவழிக் கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்களும் – பெற்றோர்களும் முக்கியப் பங்குதாரர்கள். ஆகவே இதனால் ஏற்படும் கலாச்சாரச் சீரழிவுகள், ஆபத்துகள், டிஜிட்டல் உட்கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கருத்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்”; ஆகவே இணையவழி உட்கட்டமைப்பு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டில், ‘நேரடியாகக் கற்றல் – கற்பித்தல்’ என்ற வகுப்பறைச் சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். “இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகிவிடாது” என்பதை அ.தி.மு.க. அரசு உணர்ந்து – அப்படியொரு வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்றும்; அதன் மூலம் மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக் கூடாது என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *