பிளஸ்2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு..! முக்கிய அறிவிப்பு..!

பனிரெண்டாம் வகுப்பில் தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு அறிக்கையாக வெளியாகி உள்ளது.

சென்னை, ஜூன்-17

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பனிரெண்டாம் வகுப்பை பொறுத்தவரையில் பெரும்பாலான தேர்வுகள் பொது முடக்கம் அறிவிக்கப்படும் முன் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுக்குச் செல்ல பெரும்பாலான மாணவர்களுக்கு பேருந்து வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த இரு தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும்போது நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளைப் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகளைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வை தவறவிட்டதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கடிதம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று 24.03.2020 அன்று நடைபெற்ற வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களுக்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதாத மாணவர்களிடம் இருந்து தற்போது வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களுக்கான மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக்கடிதத்தினை 24.06.2020 தேதிக்குள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

அக்கடிதத்தில் மாணவரது பெயர், தேர்வு எண் மற்றும் தேர்வு மைய எண், ஆகிய விவரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படும் விருப்பக் கடிதங்களை தேர்வு எண் வாரியாக அடுக்கி 26.06.2020 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *