வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் இணைந்து போராட வேண்டும்.. பிரதமர் மோடி உரை

கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் இணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஜூன்-16

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். இன்று கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும், நாளை பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

கொரோனா பரவலில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை. கொரோனா தொற்று பரவலுக்கு முன்னரே இந்தியா முன்னெச்சரிக்கையாக இருந்தது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு குறு தொழில்கள், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் இணைந்து போராட வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா முன்கூட்டியே தயாராக இருந்தது. மிக அதிக மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தியது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு இந்தியரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கிறோம். கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் 50-க்கு மேல் உள்ளது. மேற்கத்திய நாடுகளை போல இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் இல்லை.

ஊரடங்கு காலத்தில் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்தால் கொரோனா பரவல் குறையும் முகக்கவசம் அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அனைவரின் உயிரையும் காப்பாற்றவே அரசு முயல்கிறது. ஒருவரது அலட்சியம் கூட கொரோனாவுக்கு எதிரான போரை வலுவிழக்க செய்து விடும். மாநிலங்களில் உள்ள கள நிலைமைக் குறித்து கேட்டறிய விரும்புகிறேன் .இந்தியாவின் ஊரடங்கு நடைமுறையை உலகமே பாராட்டுகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நாட்டில் பொருளாதாரம் மேம்பட தொடங்கியுள்ளது.

இவ்வாறு மோடி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி , குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *