வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-16

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து தமிழக முதல்வர் பழனிசாமி மிகுந்த வேதனை அடைந்தார். இந்த மோதலில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ராணுவ வீரர் கே. பழனி இன்று (16.6.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தார்.

இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்னாரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *