மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாயை நிவாரணமாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஜூன்-16

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:

“தமிழக அரசு, கொரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு, இந்தியா முழுவதும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், ஊரடங்கை 30.6.2020 வரை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *