பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் திரும்பி வந்தனர்.. அதிகாரிகள் உடலில் படுகாயங்கள்..!!
பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய தூதரக ஊழியர்கள் இருவர் பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.
இஸ்லாமாபாத், ஜூன்-15

இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளைக் இன்று காலை முதலே காணவில்லை என தகவல் வெளியானது. பாகிஸ்தான் இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளை இன்று காலை முதல் காணவில்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பணி நிமித்தமாக, தூதரக அலுவலகத்தில் இருந்து இருவரும் ஒரு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் உரிய இடத்தைச் சென்றடையவில்லை. அவர்கள் சுமார் இரண்டு மணி நேரமாகக் காணவில்லை என்று இன்று காலை தகவல்கள் தெரிவித்திருந்தன.
பாகிஸ்தான் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அதிகாரிகளிடம், இந்திய தூதரக அதிகாரிகள் இது பற்றி கேள்வி எழுப்பி இருந்தனர்.
முன்னதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரண்டு அதிகாரிகள், உளவு பார்த்ததாகக் கூறி இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரியை அழைத்து தங்களது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய தூதரக ஊழியர்கள் இருவர் பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.
அவர்கள் இருவரும் சென்ற வாகனம் ஒருவர் மீது மோதியதால் மக்கள் சேர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்திருந்ததாக அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 7 மணிநேரத்துக்குப் பின்னர் இரு இந்திய தூதரக அதிகாரிகளையும் வாகன விபத்து வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் கைது செய்து விடுவித்த இரு இந்திய அதிகாரிகளும் கடுமையாக தாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரது உடலிலும் காயங்கள் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்திய அதிகாரிகளை பாகிஸ்தான் கைது செய்து தாக்கி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.