சென்னை பற்றிய அதீத பயத்தை சில விஷமிகள் ஏற்படுத்துகிறார்கள்.. SP வேலுமணி குற்றச்சாட்டு..!

சென்னை மாநகர் பற்றிய அதீத பயத்தை உண்டுசெய்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதத்தில் சில விஷமிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை, ஜூன்-15

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் & இதர அலுவலர்கள் ஆகியோரை ஒரு குழுவாக இணைத்து அக்குழுவின் தலைவர்களாக 200 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, மைக்ரோ திட்டம் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறி உள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் , மாண்புமிகு முதல்வர் தலைமையிலான தமிழக அரசு, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப்படி 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவசிய தேவைக்காக வெளியே சென்றால் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

தயவுசெய்து ஊடகங்களும் பரபரப்பு ஏற்படுத்துவதை விடுத்து மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதன் இன்றியமையாமையை சமூக பொறுப்புடன் வலியுறுத்தி அரசின் நோய்தடுப்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். பொதுமுடக்கம் சார்ந்து சென்னை மாநகர் பற்றிய அதீத பயத்தை உண்டுசெய்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதத்தில் சில விஷமிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. முகக்கவசம் அணியாமல் தங்களுக்கும் பிறருக்கும் நோய்த்தொற்று சூழலை ஏற்படுத்துபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து நோய் தொற்றில்லாத பகுதியாக சென்னையை மாற்றிட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.

கொரோனாவை தவிர்க்க சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் #Chennai மாநகர் பகுதியில் #SocialDistancing-உடன் நீண்ட தூரம் பயணிக்க கூடிய 1000 #SmartCycle-களை பயன்பாட்டிற்காக சென்னை மாநகராட்சி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்றும் அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *