தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.. மருத்துவ நிபுணர் குழு பேட்டி..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது என்று முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-15

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு சார்பில் குகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரைத்துள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. முன்பே, கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு பிறகு குறையும் என்று கூறியிருந்தோம். அதுபோல நடக்க உள்ளது. தற்போது உச்சத்தை தொட்டுள்ளதால், கொரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும். கொரோனா பாதிப்புக் குறையத் தொடங்கினாலும், மீண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு அது அதிகரிக்கத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால், பொது முடக்கத்தை தீவிரப்படுத்த முதல்வரிடம் மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பரிசோதனை மேற்கொள்ளும் போது, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், உயிரிழப்புகளைக் குறைக்க மேலும் அதிக அளவில் பரிசொதனையை மேற்கொள்ள வேண்டும்.

அது மட்டும் அல்லாமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை ஒரே நாளில் இருந்து பிறகு சரியானாலும் அதுவும் கொரோனா தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரே நாளில் சரியாகிவிட்டதால் அது கரோனா இல்லை என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. தமிழகத்தில் தற்போது 75,000 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *