பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீரென மாயமானதால் பரபரப்பு..!

இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளைக் காணவில்லை என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி, ஜூன்-15

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு இந்திய தரப்பு தகவல் தெரிவித்து, அவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. அதை நேரம் இந்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் பெயர்கள் குறித்த விபரத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

இன்று காலை முதல் அந்த அதிகாரிகள் தொடர்பில் இல்லை, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் பணியாற்றக்கூடிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை உளவு பார்த்த குற்றச்சாட்டில் காவல்துறையின் வழக்குப் பதிவுக்கு உள்ளாகினர். இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருந்தது. இதன்பிறகு இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரை ஐஎஸ்ஐ உளவாளி ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்து சென்றதும், அந்த வீடியோ வெளியாகியதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் இப்போது இரண்டு அதிகாரிகள் திடீரென மாயமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *