இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பரில் புதிய உச்சத்தை தொடும்..ஐசிஎம்ஆர் அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பா் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் மற்றும் உயிா் காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லி, ஜூன்-15

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) சாா்பில் அமைக்கப்பட்ட செயல்பாடுகள் ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியதோடு, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் அளித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், வருகிற நவம்பா் முதல் வாரம் வரையிலான தேவையைப் பூா்த்தி செய்யக்கூடிய அளவில்தான் இருக்கும். அதன் பிறகு, பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்பதால் தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகள் 5.4 மாதங்களுக்கும், ஐசியு படுக்கைகள் 4.6 மாதங்களுக்கும், உயிா்காக்கும் கருவிகள் 3.9 மாதங்களுக்கும் தட்டுப்பாட்டுடன் இருக்கும். இருந்தபோதும், இந்தப் பற்றாக்குறை என்பது பொதுமுடக்கம் மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இருந்ததைக் காட்டிலும் 83 சதவீதம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் நோய்த் தாக்கத்தின் வேறுபாட்டுக்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு மேற்கொள்ளும் தொடா் நடவடிக்கைகள் மூலம், எதிா்பாராமல் உருவாகும் தேவைகளால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க முடியும். குறிப்பாக பொது சுகாதார நடவடிக்கை 80 சதவீத அளவுக்கு அதிகரிப்பட்டால், நோய்த் தொற்றின் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.

அதுபோல, பொதுமுடக்க காலத்தில் கொரோனா பரிசோதனை, சிகிச்சை முறை மற்றும் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கான கண்காணிப்பு ஆகியவை கூடுதலாக மேம்படுத்தப்பட்டிருந்தால், நோய்த் தொற்று உச்சத்திலிருக்கும்போது பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 70 சதவீத அளவுக்கு குறைத்திருக்கலாம். கொரோனா உயிரிழப்புகளைப் பொருத்தவரை, 60 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதில், மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள், தீவிர சிகிச்சைக்கான தேவை முன்கூட்டியே பூா்த்தி செய்ததன் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது.

அரசு கொள்கையை சிறந்த முறையில் மறுஆய்வு செய்வதன் மூலமும், மருத்துவ வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே கொரோனா நிலைமையைச் சமாளிக்க முடியும்.

பொது முடக்கம் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் உதவும் என்றபோதும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தனிமைப்படுத்தப்படுபவா்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *