ஒய்யாரமா வீட்டில் இருந்து கொண்டு கொரோனா பத்தி பேசாதீங்க.. ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி..!

வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுவோருக்கு கொரோனா வைரஸைப் பற்றி அறிவதற்கும், புரிவதற்கும் வாய்ப்பு இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை, ஜூன்-13

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ப்ரியா ராஜ், டீன் சங்குமணி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜவின் பாட்ஷா, தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜாகோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ’தற்போது நடக்கும் ‘கொரோனா’வைரஸ் தொற்று நோய் பாதிப்பு சாதாரண பேரிடர் இல்லை. உலகளாவிய பேரிடர். இதுவரை உலக யுத்தத்தில் கூட யாரும் இதுபோன்ற பேரிடரை சந்தித்தது இல்லை.ஒரே நேரத்தில் ஒரு நொடிப்பொழுதில் ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கக்கூடிய கொடிய வைரஸ் கொரோனா வைரஸ். கடைசி வைரஸை ஒழிக்க வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான தொற்று பரிசோதனை உபகரணங்களை அரசு நிறைவாக வழங்கி வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் சேவை உள்ளத்தோடு பணிபுரியும் மருத்துவக்குழுவினர் இருக்கும் வரை தமிழகத்தில் எத்தனை கொரோனா வைரஸ்கள் வந்தாலும் அவை தகர்த்து எரியப்படும். வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுவோருக்கு அதை அறிவதற்கும், புரிவதற்கும் வாய்ப்பு இல்லை’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *