18 நாட்கள் வென்டிலேட்டர்… கொரோனாவை வென்ற 4 மாத குழந்தை..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதன் உடல்நிலை மோசமடைந்தது. 18 நாள்கள் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று, தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது.

விசாகப்பட்டினம், ஜூன்-13

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் பாரபட்சமின்றி பரவி வருகிறது.இந்த நோய் பாதிப்பு அதிகரிக்கும்போது, மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்படும். இதனால் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மிகவும் வலிமிகுந்த இந்த சிகிச்சையானது உடல்நிலையைப் பொருத்து, ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை தேவைப்படும். அவசியம் ஏற்பட்டால் அதைவிட கூடுதல் நாட்களும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படும்.

ஆனால், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இந்த வலிமிகுந்த சிகிச்சையில் 18 நாட்கள் தாக்குப்பிடித்து, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது 4 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்றியது. இதனையடுத்து அந்தக் குழந்தை கடந்த மாதம் 25ம் தேதி விசாகப்பட்டினம் விஐஎம்எஸ் மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 18 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து நேற்று மாலை குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் இது பற்றி கூறுகையில், குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பூரண குணம் அடைந்து விட்டதாகக் கூறி வெள்ளிக்கிழமை மாலை குழந்தை விசாகா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *