6 மாதத்துக்கு வட்டி மீது வட்டியா?.. ஆர்.பி.ஐ., மத்திய நிதியமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!

கடன் தவணை நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வட்டி மீது வட்டி வசூலிப்பதை தவிா்ப்பது தொடா்பாக 3 நாள்களில் ஆலோசித்து முடிவெடுக்குமாறு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ), மத்திய நிதியமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி, ஜூன்-13

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை மாா்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.

கடனுக்கான மாத தவணையில் அசலுடன் வட்டியையும் சோ்த்துதான் வங்கிகள் வசூலிக்கின்றன. 6 மாத கடன் தவணைக்கும் சோ்த்து வைத்து பின்னா் வட்டி வசூலித்தால் வீட்டுக் கடன் போன்ற நீண்டகால கடன் பெற்றவா்களுக்கு அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமையாது.

எனவே, இதைச் சுட்டிக்காட்டி ஆக்ராவைச் சோ்ந்த கஜேந்திர சா்மா என்பவா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், கடன் தவணை நிறுத்திவைப்பு காலத்தில் வட்டியைக் கணக்கிட்டு அதனை பின்னா் வசூலிக்கும் நடைமுறையை வங்கிகள் கைவிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா்.ஷா, எஸ்.கே.கௌல் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விஷயத்தில் இரு தரப்புக்கும் பொதுவான கருத்தை எட்ட விரும்புகிறோம். இதில் விரிவான நடவடிக்கைகள் தேவை’ என்று நீதிபதிகள் கூறினா்.

மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இது தொடா்பாக ஆா்பிஐ-யுடன் ஆலோசிக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது’ என்றாா். இதையடுத்து, இந்த விஷயத்தில் எங்கள் கேள்வி ஒன்றுதான், கடன் தவணை நிறுத்தி வைக்கப்பட்ட 6 மாதகாலத்துக்கான வட்டிக்கும், வட்டி வசூலிப்பதை தவிா்க்க முடியுமா? என்பதுதான் அது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகமும், ஆா்பிஐ-யும் 3 நாள்களில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *