சுகாதார பேரிடர் மற்றும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வதந்திகளை பரப்பாதீர்கள்! SP வேலுமணி எச்சரிக்கை..!!

வதந்திகளை காழ்ப்புணர்ச்சியோடு மனசாட்சியின்றி திட்டமிட்டு பரப்புரை செய்து மக்களுக்கு குழப்பம் விளைவிக்கும் வதந்தி அரசியல் செய்வோர் வைரசை விட மிகக்கொடியோர்.
மக்கள் நலன் கருதி தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை, ஜூன்-12

மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ்,வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாத இந்த வைரஸை தமிழகத்தில் கட்டுப்படுத்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும், அதிக மருத்துவ ஆய்வு கூடங்களையும் ஏற்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மருத்துவ வல்லுனர் குழுக்களுடன் அடிக்கடி கலந்தாய்வு நடத்தி, தமிழக மக்களின் நலன் காக்க உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி தலைநகர் சென்னையில், கொரோனா தொற்றை தடுக்க மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துமனைகளில் போதுமான . இடங்களும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்துள்ளார்.இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமில்லை என்றும் அவர்களுக்கு கோவையில் சிகிச்சை அளிக்கப் போகிறார்கள் என்றும் விஷமத்தனத்தோடு வதந்தி பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.சென்னையில் இருந்து பல மாவட்டங்கள் கடந்து நோயாளிகளை கோவைக்கு அழைத்து வரப்போகிறார்கள் என்று மனசாட்சி இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வதந்திகளை பரப்பும் தீய எண்ணங் கொண்டவர்கள் தங்களது கீழ்த்தரமான செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப் பேரிடர் காலத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்த எந்நேரமும் உழைத்துக் கொண்டு இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நெறி மிகுந்த ,தொலைநோக்கு சிந்தனை கொண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி,அனைவரும் சுகாதார பேரிடரை எதிர்கொண்டு ஆரோக்கியமான தமிழகத்தை மீட்டெடுக்க பாடுபடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *