சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை.. இ-பாஸ் சேவை நிறுத்தப்படவில்லை.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-12

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஊரடங்கை முழு அளவில் செயல்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது:-

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான இ-பாஸ் சேவை நிறுத்தப்படவில்லை. நிறுத்தப்படுவதாக கூறுவது வதந்தியே. நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக்குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையிலே அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியது.

தமிழக அரசின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *