சசிகலா எப்போது விடுதலை ஆவார்?.. ஆர்டிஐ கேள்விக்கு பெங்களூரு மத்திய சிறைச்சாலை அதிரடி பதில்!

`சசிகலா எப்போது விடுதலை ஆவார்?’ எனத் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் பரபரப்பான பதிலை அளித்துள்ளது.

பெங்களூரு, ஜூன்-12

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு கர்நாடக அரசின் சிறைத்துறை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு லதா பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சசிகலா (கைதி எண்: 9234) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு தண்டனை கைதியை விடுதலை செய்ய பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு அபராத தொகை அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலா விடுதலை குறித்து உங்களுக்கு எங்களால் சரியான தேதியை கொடுக்க முடியவில்லை.

இவ்வாறு லதா தெரிவித்துள்ளார்.

இதனால சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் சிறையில் இருந்து வெளிய வந்ததும் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *