தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!!

தமிழகத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று வெளியாகும் தகவலிலும் உண்மை இல்லை. தமது பெயரில் தவறான செய்தி வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

சென்னை, ஜூன்-12

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மேட்டூர் அணையில் கடந்த 300 நாட்களுக்கு மேலாக 100 அடியை கடந்து நீர் உள்ளது. மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும்.5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன; உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடைமடை வரை மேட்டூர் அணையின் நீர் சென்று சேர அரசு நடவடிக்கை எடுக்கும்.டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளன. குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்காக ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டில் பணி நிறைவு பெற்றது.

தஞ்சை, புதுக்கோட்டை,கல்லணை கால்வாயை சீரமைக்க ரூ.288 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டுவதற்கு ரூ. 428 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். முக்கொம்பில் கதவணை அமைப்பதற்காக ரூ.387 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 48 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு தூர்வாரும் பணியை கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று வெளியாகும் தகவலிலும் உண்மை இல்லை. தமது பெயரில் தவறான செய்தி வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை.சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கின்றது.கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை.

8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். போக்குவரத்து அதிகம் அடைந்துள்ளதால் சாலைகள் விரிவாக்கம் அவசியம். தேவைக்கேற்ப நிலத்தை கையகப்படுத்தி சாலைகள் அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளை அமைக்க உள்கட்டமைப்பு அவசியம்.

தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள்.அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள்.அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவு தான்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும்.பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *