கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைச்சர்கள் SP வேலுமணி, விஜயபாஸ்கர் ஆய்வு..!

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தனர்.

கோவை, ஜூன்-11

கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று (ஜூன் 11) ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கொரோனா பாதிப்பு அதிகமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இருந்தாலும் பாதிப்பு ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கும் வகையிலும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. கரோனா வைரஸ் முன்பு இருந்ததை விட சற்று உருமாறி இருப்பதாக மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர். எனவே, மக்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகளுக்கும் தற்போது மருத்துவமனைகளில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய சூழ்நிலை வந்தால், கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்குவதோடு, உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய க்ளிப் போன்ற ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ என்ற கருவியைக் கொடுப்பதற்கான ஆலோசனையில் அரசு இருக்கிறது.
அதற்காக 20 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டர்’ கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவை கொள்முதல் செய்யப்பட உள்ளன. சென்னையிலிருந்து நோயாளிகளைப் பிற மாவட்டங்களுக்கு மாற்றி சிகிச்சை அளிக்கும் திட்டம் ஒருபோதும் இல்லை. கொரோனோ சமூகப் பரவலாகி இருக்கிறதா என்பதை மத்திய அரசுதான் தெரிவிக்க வேண்டும்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறும்போது, “சுகாதாரத் துறையுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம், உள்ளாட்சித் துறைகள் அனைத்தும் சிறப்பாகப் பணி செய்து வருகின்றன. மக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *