சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!

சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சேலம், ஜூன்-11

சேலம் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்துரோடு மையப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அதிநவீன சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. குரங்குச்சாவடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

பின்னர், சேலம் லீபஜார் முதல் செவ்வாய்பேட்டை இடையே ரூ.46.35 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் திறந்து வைத்தார்.

இந்த உயர்மட்ட பாலங்கள் திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேம்பாலங்கள் திறப்பால் சேலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சேலத்தில் தான் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சேலத்தில் நீதித்துறை சார்பில் சேலம் சட்டக் கல்லூரி மற்றும் மாணவ, மாணவியர்கள் விடுதிக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 286 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *