ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை, ஜூன்-10

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த மாணவரின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும் என்றும், ஏழை மற்றும் வசதிபடைத்த மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகும் என்றும் கூறியிருந்தார். மேலும் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார். அப்போது மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், தற்போதுள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.
கொரோனா தொற்றால் அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளதால், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். பாதுகாப்பான ஆன்லைன் கல்வியை வழங்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து ஜூன் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.