கண்ணம்மாபேட்டை மயானத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மாபேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை, ஜூன்-10

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமாகி, இன்று காலை அவர் உயிரிழந்தார். மிகுந்த பாதுகாப்புடன் அவரது உடல் முழுவதுமாக மூடப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள மகாலட்சுமி தெருவில் இருக்கும் வீட்டுக்கு ஜெ. அன்பழகன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

வீட்டிற்கு வெளியே சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பாதுகாப்பு உபகரண ஆடை அணிந்திருந்த நான்கு பேர் மட்டுமே, அவரது உடல் இருந்த சவப்பெட்டியை தொட அனுமதிக்கப்பட்டனர். கண்ணம்மாபேட்டையில் தயாராக இருந்த குழியில், அவரது உடல் மிகவும் பாதுகாப்பான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகே ஜெ. அன்பழகனின் உடலும் புதைக்கப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஏராளமான திமுகவினர் கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகனின் உருவ படத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *