ஜெ.அன்பழகன் மறைவுக்கு அமைச்சர் SP வேலுமணி இரங்கல்..

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் SP வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-10

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, அதற்கு அடுத்த இரு நாள்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது உடல், கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

1958 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி பிறந்த ஜெ.அன்பழகன், தனது பிறந்த தினமான இன்றே காலமானார். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள ஜெ.அன்பழகன், சென்னையில் திமுகவை வளர்த்த மூத்த முன்னோடிகளில் ஒருவரான தியாகராயர் பழக்கடை ஜெயராமனின் மகன் ஜெ. அன்பழகன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். திமுகவின் தென் சென்னை மாவட்ட செயலாளராகவும், திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் விளங்கி வந்தவர். முதன்முறையாக 2001 -இல் தி.நகர் தொகுதியிலும், 2011, 2016-இல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் SP வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. J. அன்பழகன், இன்று உயிரிழந்தார் என்கிற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *