பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்.. விளையாட்டு, சினிமா, அரசியலில் ஆல் ரவுண்டராக இருந்தவர்…!!

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 62. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்திருப்பது, உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, ஜூன்-10

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.

ஜெ.அன்பழகன் மறைவுச்செய்தியை அறிந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை முன் சென்னை மேற்கு மாவட்ட திமுகவினர் குவியத் தொடங்கினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
அவரது இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டையில் இன்று நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஜெ.அன்பழகன். கட்சிப் பணிகளை திறம்படச் செய்து முடித்து கட்சி தலைமையிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவர்.

மறைந்த ஜெ.அன்பழகனுக்கு அரசியல் மட்டுமல்லாமல் விளையாட்டு, சினிமா, உள்ளிட்ட துறைகளிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. கட்சிப்பணிகளில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், விளையாட்டு போட்டிகளை பார்க்காமலோ, சினிமாவை பற்றி விவாதிக்காமலோ அவர் இருந்ததில்லை.

1958-ல் பிறந்த ஜெ.அன்பழகன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001-ல் முதன்முறையாக தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2011, 2016-ல் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெ.அன்பழகன் 15 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக திறம்பட பணியாற்றி வந்தார். 2015 பெருவெள்ளம், 2016 வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் தீவிரமாக களப்பணியாற்றியவர். அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் ஆதி பகவான், யாருடா மகேஷ் போன்ற படங்களை தயாரித்தார். இன்று ஜூன் 10-ம் தேதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிறந்தநாளான இன்று அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது மறைவு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *