மழை நீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

சென்னை. அக்டோபர்.7

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்னையில் நிலத்தடி நீரின் அளவு  உயர்ந்துள்ளதாக சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

 பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக பல்வேறுவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

  இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக குடிநீர்வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெருநகர சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான நிலத்தடி நீர்மட்டம் உயர்வு குறித்து ஒப்பீடு அளவீடுகளுடன் வரைபடமும் வெளியிடப்பட்ள்ளது.
 சென்னை மாநகரில் பகுதி வாரியாக நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்க பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பாக கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
 அதனடிப்படையில் அம்பத்தூர், திருவிக நகர், பெருங்குடி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிசமாக உயர்ந்துள்ள நிலத்தடி நீர்மட்டத்தை கணித்து நிலத்தடி நீரின் அளவு மற்றும் உயர்வு குறித்து வரைபடம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை நமக்கு அளித்துள்ள பெருங்கொடையான மழைநீரை அனைவரும் ஒன்றுபட்டு சேமித்து பூமிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீர்மட்டத்தை வெகுவாக உயர்த்த முடியும்.
 மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதின் பலனாக நிறைய வீடுகளில் மழைநீரை சேகரித்து பூமிக்குள் விடுகிறார்கள்.
 கிணறு வைத்திருப்பவர்கள் மழை தண்ணீரை கிணற்றில் விடுகின்றனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *