திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்…கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்.

சென்னை, ஜூன்-10

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, அதற்கு அடுத்த இரு நாள்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் ஜெ. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. சிறுநீரகம், இதயத்தின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும், அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்பட்டு, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரேலா மருத்துவமனைக்கு விரைந்து சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

காலமான ஜெ. அன்பழகன் திமுக சார்பில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். 2001-இல் தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஜெ அன்பழகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *