செங்கல்பட்டு- திருச்சி, அரக்கோணம் – கோவை இடையே ஜூன் 12-ந்தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

ஜூன் 12-ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரெயில் ஜூன் 12-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-9

தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சிறப்பு ரெயில்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதேவேளையில் மாநிலத்திற்குள் நான்கு வழித்தடங்களில் ரெயில்களை இயக்க வேண்டுகோள் விடுத்தது.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று திருச்சி – நாகர்கோவில் உள்பட நான்கு வழித்தடங்களில் ரெயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஜூன் 12-ந்தேதி முதல் விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக செங்கல்பட்டிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், ஜூன் 12-ம் முதல் இயக்கப்படும் இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8.10க்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து காலை 6.30க்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு பகல் 12.40க்கு வந்தடையும்.

மேலும், ஒரு சிறப்பு ரயில் திருச்சி – செங்கல்பட்டுக்கு இயக்கப்படுகிறது. இது அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.30க்கு செங்கல்பட்டு வந்தடையும். செங்கல்பட்டில் இருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

இதுபோல ஜூன் 12 முதல் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் தினந்தோறும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு பிற்பகல் 2.05 மணிக்கும், மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து 3.15 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்துக்கு இரவு 10 மணிக்கும் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *