பூச்சாண்டி காட்டாதீங்க.. மு.க.ஸ்டாலினுக்கு SP வேலுமணி எச்சரிக்கை..!

மக்கள் பணியாளர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.

சென்னை, ஜூன்-8

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரது அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதை கண்டு கதிகலங்கி வரும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடி, பொய்ப் பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்துதர முடியுமோ அவை அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து கொண்டிருக்கிறது. அவரின் சிறப்பை, தாங்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மனம் குமுறுகிறார். மதிமயங்கி பொய்யையும், புரட்டையும் பரப்ப முயற்சிக்கிறார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகள் நிச்சயம் பலிக்காது.

உள்ளாட்சித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக 123 தேசிய விருதுகளை பெற்று, உள்ளாட்சியில் சாதனை படைத்து, பாராட்டை பெற்றுள்ளதை கண்டு பொறுக்க முடியாமல், இமயம் போன்று உயர்ந்து நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசியல் களத்தில் போட்டி போட முடியாமல், சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த என்னோடு வெற்று அறிக்கை வாயிலாக மலிவு அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்.

முதல்வரின் செயல்பாட்டிற்கு ஈடுகொடுக்க முடியாமல், எதிர்க்க இயலாத நிலையில் தமிழகத்தின் நலன்களை புறக்கணித்து, கோவையில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்திட 5 மணிநேரம், திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் நேரத்திலும், சாதாரண எளியோனான என்னை எதிர்த்து, போராட்டங்களை தூண்டிவிடுவது, வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது.

சரிந்து கொண்டிருக்கும் தன் அரசியல் செல்வாக்கை கொரோனா மூலமாக சரிக்கட்டலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சும். காரணம் மதம், இனம், சாதி என்னும் பாகுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரையும் நேசிக்கும் கொள்கைகளாலும், செயல்களாலும் இன்று தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார் முதலமைச்சர். மகத்தான மக்கள் செல்வாக்கால் இமயம் போல் உயர்ந்து நிற்கும் எடப்பாடியார் முன் இடிமுழக்கம் கேட்ட எலியாய் ஓடிமறைவார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவரைப் போல ”கொரோனா வெல்லாம் எப்படி போகுது?” என்று கிண்டலும், கேலியுமாக அரசியல் பிழைப்பு நடத்தும் வேடதாரியல்ல நாங்கள். செல்வத்தையும், செல்வாக்கையும் பகட்டாக காட்டிக் கொள்ளும் தங்கள் சொந்த கட்சிக்காரர்களுக்கே நிவாரணப் பொருட்கள் என்ற பெயரில் பொட்டலங்களை வழங்குவதையும், அதை புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுவதையும், மு.க.ஸ்டாலின் பொழுது போக்காக செய்வதைப் போல் அல்ல, எங்கள் மக்கள் பணி. மக்களோடு மக்களாய் தோள்நின்று உழைப்பவர்கள் நாங்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இரவு, பகல் பாராது, உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், காவல்துறையினரையும், தன்னார்வ தொண்டர்களையும் கொச்சைப்படுத்தி விளையாடும் வழக்கத்தை மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும். இல்லையேல் மக்களின் இன்றைய கேலியும், கிண்டலும் நாளை ஸ்டாலினுக்கு எதிரான பெரும் கோபமாய் உருமாறும். அதைத்தாங்கும் சக்தி ஸ்டாலினுக்குக் கிடையாது என்பதை அவர் உணர வேண்டும்.

கடந்த 2006 – 2011ல் மைனாரிட்டி அரசாக இருந்த திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பேரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்மீது உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் காவல்துறையினரை வைத்து, பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, 5 முறை பொய் வழக்குகளை பதிவு செய்து, 17 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். அவ்வழக்குகளை விதிமுறைக்குட்பட்டு சட்ட ரீதியாக எதிர்கொண்டோம் என்பதை அன்றைய துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் மறந்துவிட்டாரா? மக்கள் மறந்துவிடவில்லை.

ஆனால், கோவை தெற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ், அவரிடம் உதவியாளராக பணிபுரியும் கீர்த்திஆனந்த் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து வரும்போது, வால்பாறை சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் தென்றல் செல்வராஜ் அவர்கள் காவல்துறை வாகனத்தை மறித்து அவரது உதவியாளரை விடுவித்து தலைமறைவு ஆகிவிட்டனர்.

காவல்துறையினரை தங்களது பணியை செய்யவிடாமல் தடுத்தும், அராஜகபோக்குடன் திமுக குண்டர்களின் துணையுடன், வழக்கு பதிவு செய்யப்பட்ட கைதியை விடுவித்து சென்றதால், காவல்துறையினர் சட்ட விதிகளின்படி செயல்பட்டு சட்டம் ஒழுங்கை காக்க தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினரை தங்களது பணியினை செய்ய விடாமல் தடுத்து, அராஜபோக்கில் ஈடுபட்ட திமுகவைச் சார்ந்த பொறுப்பாளர்களையும், குண்டர்களையும் கண்டிப்பதை விடுத்து, ஜெயலலிதாவின் குறுக்கு வழியில் முதல்வராக முயற்சித்து சட்டமன்றத்திலும் பொது இடங்களிலும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய மு.க.ஸ்டாலின் கழகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டதை முறியடித்து அஇஅதிமுகவை ஒருங்கிணைத்து கழகம் தொடர்ந்து ஆட்சிபொறுப்பில் தொடர ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து முக்கிய பங்காற்றிய என்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் தங்களது தவறை மறைத்து, மக்களை திசை திருப்பும் வகையில், அமைச்சர் வேலுமணி 3 ஆயிரம் கோடி ஊழல் என கூறி மாபெரும் போராட்டத்தை கோவையில் நடத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவினர் கொரோனா தொற்று பேரிடர் நேரத்தில் பொதுமக்கள் துயர்துடைக்கும் பணிகளில் ஆத்ம திருப்தியுடன் பங்கெடுத்தோம் என்பதை கோவை மக்கள் நன்கு அறிவர்.

ஆனால் திமுகவினர் பொதுமக்களுக்கு சொந்தமாக உதவ துப்பில்லாமல், இரட்டை இலக்க எண்ணிக்கையில் அங்கொன்று இங்கொன்று வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக தங்களை விளம்பர படுத்திக் கொண்டு கொரோனா பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாக பொதுமக்களுக்கும், திமுகவின் தலைமைக்கும் தெரிவித்து நாடகமாடி மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *