புதுவை முதலமைச்சர் நாராயணசாமி மீது பாமக தன்ராஜ் புகார்.. அரசியல் சூதாட்ட கிளப் நடத்துவதாக குற்றச்சாட்டு


புதுச்சேரி, அக்டோபர்.7
முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுடனும் மாநில ஆளுனருடனும் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக புதுவை பா.ம.க அமைப்பாளர் தன்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலோடு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
வழக்கமாக இடைத்தேர்தல் என்பது அந்த தொகுதியின் உறுப்பினர் மரணமடைந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ நடத்தப்பட வேண்டியது. ஆனால் , சுயலாபத்துக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, இடைத்தேர்தலை மக்களிடையே திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். புதுச்சேரியில் இரண்டு முறை இடைத் தேர்தல் திணிக்கப்பட்டு இருக்கிறது. 2016 சட்டசபை தேர்தலின் போது அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
புதுச்சேரி முதலமைச்சராக நமச்சிவாயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், சட்டசபை தேர்தலையே சந்திக்காத நாராயணசாமியை முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் முன்னிறுத்தி ஆட்சியமைத்தது . எந்தப் பதவியிலும் இல்லாமல் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமிக்காக இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது.
பரஸ்பர ஒப்பந்தம் போன்று நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் பதவி விலகினார். அந்த தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் நாராயணசாமி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பின்னர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். இதனால் வைத்தியலிங்கம் தான் போட்டியிட்ட காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் காமராஜர் தொகுதிக்கு வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான் குமார் போட்டியிடுகிறார். இவர் முதலமைச்சர் நாராயணசாமிக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை எதிர்த்து அதிமுக பா.ம.க ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புவனா என்கிற புவனேஸ்வன் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரம்
முன்னாள் முதலமைச்சருமான என்.ரங்கசாமி , புதுச்சேரி மாநில பாமக பொறுப்பாளர் தன்ராஜை சந்தித்து ஆதரவு கோரினார்.

  தன்ராஜை சந்தித்து ஆதரவு கோரும்  முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி

இதனையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ள முன்னாள் எம்.பி. தன்ராஜிடம் செய்தியாளர்களிடம் பேசியதாவது.


நாராயணசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை மத்திய அரசுடனும், மாநில துணை நிலை ஆளுனருடனும் சண்டை போடுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனால் வளர்ச்சிப் பணிகள் மாநிலம் முழுவதும் முடங்கி கிடக்கிறது. இப்படி ஒரு அலங்கோல ஆட்சியை பார்த்து மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். புதுச்சேரியை முழுமையாக மாற்ற எங்களிடம் நிறைய புதிய திட்டங்கள் உள்ளன. ஆனால்,முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் தற்போதைய எம்.பி. வைத்திலிங்கத்தின் அரசியல் லாபத்துக்காகவே, இரண்டு இடைத்தேர்தல் வந்துள்ளது. வாக்களித்த தொகுதிமக்களைப் பற்றி கவலைப்படாமல், இஷ்டம் போல எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். அல்லது இடைத்தேர்தலுக்கு காரணமான கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் தேர்தல் செலவை அபராதம் போன்று வசூலிக்க வேண்டும். இடைத்தேர்தலை புகுத்தி காமராஜ் நகர் தொகுதி மக்களை கேவலப்படுத்திய காங்கிரசுக்கு பாடம் புகட்ட எங்க கூட்டணி மட்டுமில்லை. தொகுதி மக்களும் தயாராகிட்டாங்க. காமராஜ் நகரில் எங்க கூட்டணி வேட்பாளர் புவனேஸ்வரன் வெற்றி பெறுவது உறுதி என்று தன்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.


காமராஜ் நகர் தொகுதியில் பாமகவினரின் வாக்குகள் கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *