எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம்

புதுடெல்லி, அக்டோபர்-05

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.  பின்னர், சிதம்பரத்தை செப்டம்பர் 5-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்துவிடக்கூடும் என்ற வாதத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றமும், சிபிஐ நீதிமன்றமும் தொடர்ந்து அவரின் ஜாமீன் மனுவை நிராகரித்து வந்தனர். மேலும், அக்டோபர் 17-ம் தேதிவரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுவலி காரணமாக சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *