தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் பெற வேண்டும்? .. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூன்-6

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கென கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் எழுந்தது.

அதன் எதிரொலியாக தமிழக அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பில், தமிழக அரசு கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 03.06.2020 அன்று இவ்வரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா நோய் தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை வெளியிடப்பட்டது.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கொரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.

இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே உத்தரவிடுகிறது.

அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம புற தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.7,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம்.

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது. கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கொரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *