லண்டனில் எடப்பாடி வேட்டிக் கட்டிக்கொண்டு கையெழுத்திட மாட்டாரா? – தங்கதமிழ்ச்செல்வன்

சென்னை ஆகஸ்ட் 30

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட் சூட் அணிந்திருப்பது செயற்கையாக இருக்கிறது. அவர் வேட்டி கட்டிக்கொண்டு கையெழுத்துப் போட மாட்டாரா? என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனை இன்று திமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக கொள்கைகளைப் பரப்புவதற்காக தமிழகம் முழுவதும் பயணிப்பேன். எதையெடுத்தாலும் விமர்சனம் செய்யக்கூடிய நிலைமைக்கு அமைச்சர் ஜெயக்குமார் வந்துவிட்டார். ஆடு நனைகிறது என்பதற்காக ஓநாய் கவலைப்படக் கூடாது.

இணையம் வளர்ந்துவிட்ட யுகத்தில் முதல்வர் லண்டன் சென்று அமெரிக்கா செல்வதன் பின்னணியில் விஷயம் இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் முதல்வர் எதற்கு வெளிநாட்டுக்கு சென்றார் என்பதை ஊடகத்திடம் நாங்கள் சொல்வோம். அவரின் பயணத்தில் மர்மம் இருக்கிறது. வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டின் நிலைமையை சரிசெய்யாமல், முதலீட்டாளர்களுக்காக லண்டன், அமெரிக்கா சென்றதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், அவரின் உடை மாற்றத்தை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரின் உடை மாற்றம் நன்றாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். செயற்கையாக இருக்கிறது. ஏன் வேட்டி கட்டிக்கொண்டு கையெழுத்துப் போட மாட்டாரா? அவர் ஏன் வெளிநாடு சென்றார் என்பது குறித்த சில கருத்துகள் எனக்கு வந்திருக்கின்றன. தெளிவாக தெரிந்துகொண்டு அதனை வெளிப்படுத்துவேன்”,

இவ்வாறு தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *