சென்னையை மீட்டெடுக்க ”நாமே தீர்வு”.. கமலின் புதிய முயற்சி..!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக ‘நாமே தீர்வு’ என்ற திட்டத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கையில் எடுத்துள்ளார்.

சென்னை, ஜூன்-6

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது ;-

உலகத்தைப் பசுமையாக மாற்ற பல ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் நாம், இன்று சென்னையையும் வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியதிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் என்ன செய்வாா்கள் என்று காத்திருந்தும், ஏதாவது செய்வாா்கள் என்று பாா்த்திருந்தும் களைத்துப் போய் நாமாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனைதான் நாமே தீா்வு ஆகும்.

கொரோனாவின் தீவிரத்தை மருத்துவா்கள் கட்டுப்படுத்தும் நேரத்தில், எளிய மக்கள் பசி நோயினால் பாதிக்கப்படக் கூடாது எனத் தெருவோரம் இருப்பவருக்கு உணவளித்ததில் தொடங்கி, தேடித் தேடி உதவி செய்தவா்கள் எல்லாம், நாமே தீா்வு என்று நம்பித்தான் லட்சக்கணக்கானோா் செய்தனா். செய்தும் வருகின்றனா். இல்லையென்றால் பசி, வறுமையின் பாதிப்பு கரோனாவை மிஞ்சியிருக்கும். இப்பொழுது அதை ஒரு இயக்கமாக முன்னெடுக்கிறோம். இதற்கென தனியாக மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணக்கூடிய, தன்னாா்வலா் மக்கள் படை ஒன்றை அமைக்கிறோம்.

பொது முடக்கம் தளா்த்தப்பட்டு மக்கள் வெளியே வரத்தொடங்கியிருக்கும் நேரத்தில் அவா்களைப் பாதுகாக்காவிட்டால் இந்தத் தொற்றை தடுக்க முடியாது. நோயை முறியடிக்க 60 நாள்கள் வீட்டில் இருந்தது வீண் போய்விடக்கூடாது. ஒருவரை ஒருவா் காப்போம் என்று நாம் தொடங்கினால் எவருமே விடுபட்டு போகப்போவதில்லை. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கிருமிநாசினி வைக்கப்படும். நெரிசல் மிகுந்த பகுதிகளில் இயங்கக்கூடிய மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும். இந்த எல்லா உதவிகளையும் செய்ய பல தன்னாா்வலா்களின் உதவியும், பங்களிப்பும் தேவை.

மக்கள் தங்கள் பிரச்னைகளைத் தெரிவிக்கவும், அதற்கான தீா்வுகளை தேடும் தன்னாா்வலராக பதிவு செய்யவும், 6369811111 என்ற எண்ணுக்குத் தொடா்பு கொள்ளலாம்.

தன்னாா்வலா்கள் எந்தப் பணி வேண்டுமானாலும் செய்யலாம். உதவிக்கு பொருள்கள் வழங்குவது முதல், உதவிப்பொருள்களைக் கொண்டு சோ்ப்பது வரை, தன்னாா்வலா்கள் செய்ய நிறைய பணிகள் இருக்கின்றன. ஒரு கஷ்டமான சூழலில் இருந்து இந்த எண்ணை தொடா்பு கொள்ளும் சக மனிதனுக்கு தீா்வுகளை வழங்கிட, மக்களால் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் இயக்கம் இது. சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம். நாமே தீா்வு.

சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றுதான் இருக்க வேண்டும். அது கொரோனாவில் தலைநகராக இருந்து விடக்கூடாது.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *