அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய ஜான்பாண்டியன் மறுப்பு?

அக்டோபர்-05

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதியில் அதிமுகவை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் அந்த தொகுதியில் வலுவாக இருப்பதால், கூட்டணி கட்சிகளின் பலம் இருந்தால் நாங்குநேரியில் வெற்றிபெறலாம் என அதிமுக நினைக்கிறது.

இதற்காக, கூட்டணி கட்சிகளின் ஆதரவை கேட்டு, அதிமுக உறுதிபடுத்தி வருகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ.க. அறிவித்தது. இந்த நிலையில், ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை கோரி ஜான்பாண்டியனின் வீட்டுக்கு சென்றனர்.

அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜு மற்றும் சில எம்.பி.க்களும் ஜான்பாண்டியனை சந்தித்து பேசினர். அப்போது, ஜான்பாண்டியனோ பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 சமூகங்களை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடுவோம் என்று அதிமுக தலைமை கூறியதால் தான், நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால், தற்போதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்று அதிருப்தியை தெரிவித்தார். ஆகையால், தமது சமூக மக்களிடம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி பிரச்சாரம் செய்யமுடியாது என்று ஜான்பாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலுக்கு முன்பு பட்டியல் இனத்தவர் பற்றிய அரசாணை வெளியிட்டால் ஆதரவு கொடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என ஜான்பாண்டியன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அவரது வீட்டிற்கு சென்ற அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் அதிருப்தியுடன் திரும்பினர்.  ஜான்பாண்டியனை போன்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் பட்டியலினத்தவர் பற்றிய அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் அதிமுக தலைமை அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *