ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது.. மத்திய அரசு

கொரோனா பாதிப்பு காரணமாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், செலவினங்களைக் குறைக்கும் வகையில் ஒரு வருடத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-5

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால், மத்திய அரசு பல்வேறு வகைகளில் செலவுகளை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் கரீப் கல்யாண், ஆத்ம நிர்பர் பாரத் அபியான் மற்றும் பிற சிறப்பு தொகுப்புத் திட்டங்களை தவிர, எந்தவொரு புதிய திட்டத்தையும் / துணைத் திட்டத்தையும் 2020-21ல் அரசு தொடங்காது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரீப் கல்யாண், ஆத்ம நிர்பர் பாரத் ஆகிய திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என்றும் கூறி உள்ளது.

இத்தகைய திட்டங்களுக்கான கொள்கை ரீதியான ஒப்புதல் இந்த நிதியாண்டில் வழங்கப்படாது. ஏற்கனவே மதிப்பிடப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட புதிய திட்டங்களைத் தொடங்குவதும் ஒரு வருடத்திற்கு அதாவது, 2021ம் ஆண்டு மார்ச் 31 வரையிலோ, அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ நிறுத்தி வைக்கப்படும் என நிதித்துறை கூறி உள்ளது.

எனவே வரும் காலங்களில் மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் ஒரு வருடத்துக்கு அறிவிக்கப்படாது. இது தவிர, இந்த நிதியாண்டில் வேறு எந்த புதிய திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்படாது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரி நிதி அமைச்சகத்துக்கு அனைத்துத் துறை அமைச்சகங்களும் கோரிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அமைச்சர்களும் தங்கள் துறைகளுக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *