ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு.. அரசு சார்பில் உதவிகள் செய்ய தயார் என உறுதி..!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார்.

சென்னை, ஜூன்-5

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன் கடந்த செவ்வாய்க்கிழமை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஜெ.அன்பழகன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு அதிகமாக இருந்தது. முதலில் அவருக்கு மூக்கின் வழியே பிராண வாயு வழங்கப்பட்டது. ஆனாலும், அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாததால், செயற்கை சுவாசக் கருவிகள் (வெண்டிலேட்டா்) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிவித்தது.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அன்பழகனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்பழகனுக்கு நேற்று 80% ஆக்ஸிஜன் தேவைப்பட்டதாகவும், இன்று 67% மட்டுமே தேவை குறைந்திருப்பதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரேலாவிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர்,அரசு சார்பாக எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி அளித்துள்ளார்.

அதே போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மருத்துவர் ரேலாவிடம் சிகிச்சை குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *