இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு.. 6348 பேர் பலி..!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 109462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
டெல்லி, ஜூன்-5

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 226770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 273 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 109462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 110960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2710 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33,681 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 27,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,902 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 25,004 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 650 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9898 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.