தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

தனியார் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-4

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய தனது அறிக்கையை அளித்தது. அதனடிப்படையில் கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது வார்டில் அனுமதிக்கப்பட்டோர் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு அதிகபட்ச தொகுப்பு கட்டணமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணம்

கிரேடு ஏ1, ஏ2 – ரூ. 10,000 முதல்- ரூ. 15,000 வரை
கிரேடு ஏ3, ஏ4 – ரூ. 9000 முதல் – ரூ. 13,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

  1. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
  3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
  4. மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவப் பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்த புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன் பெறத் தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *