ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்.. மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்..!

பொதுமுடக்க காலத்தில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

டெல்லி, ஜூன்-4

கொரோனா பரவல் காரணமாக முதலில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மார்ச் 25 முதல் மே 14-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருந்தது. இதன், காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இருப்பினும் இந்த ஊரடங்கு காலங்களில் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமால் முழு ஊதியத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என பிரதமர் மோடி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே, பொதுமுடக்கம் கடந்த 70 நாட்களுக்கு மேலான அமலில் உள்ளதால், ஊழியர்களுக்கு முழு ஊதியம் அளிக்க முடியாது. எனவே, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அதனை காரணம் காட்டி ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

இதில், ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 25 முதல் மே 14 வரை மட்டுமே இந்த உத்தரவு அமலில் இருந்தது என்றும், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள 54 நாள்களுக்கு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஊழியர்கள் முழு ஊதியம் பெற்றிருந்தாலும் அதனை நிறுவனத்துக்கு திரும்ப கொடுக்க அரசு உத்தரவிட முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த 54 நாட்களுக்குப் பிறகு அரசாணையானது திரும்பப் பெறப்பட்டு விட்டது. அதன் பின்னர் பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டியது அவசியமில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கில் ஜூன் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விதித்த தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *