உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை..ராகுல்காந்தி

உலகப்போரின் போது கூட இந்தளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி கூறியுள்ளார்.

டெல்லி, ஜூன்-4

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நான்கு முறை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு பல தளா்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

இந்தச் சூழலில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ராகுல்காந்தி பொருளாதார நிபுணர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் தொழிலதிபரும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான ராஜீவ் பஜாஜூடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், நோய்த்தொற்றுக்காக உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனை செய்திருப்பார்களா என்று நான் நினைக்கவில்லை. உலகப்போரின் போது கூட இந்தளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை. அப்போது கூட சில விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தன என்று நினைக்கிறேன். இது ஒரு தனித்துவமான மற்றும் பேரழிவு. பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் எங்கும் செல்ல இயலவில்லை.

இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தபிறகு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து தான், ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது என கூறுகிறேன். உலகிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. அத்துடன் பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டுவிடப்போகிறது எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *