கொரோனா அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் தொடரும்.. சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்..!!

சென்னையில் கொரோனா உள்ளவரிடம் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, ஜூன்-4

கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் திட்டம் ரத்து என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய நிலையில் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா தொற்றின் புரிதல்கள் பற்றி தவறான தகவல்கள் பரவுகிறது. சென்னையில் கொரோனா உள்ளவரிடம் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும், வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காமல் வெளியே வருபவர்களை மட்டுமே முகாமிற்கு அழைத்து செல்லப்படுவர் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் பலர் கொரோனா தொற்று முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர், இதனை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஒரு மாதத்துக்கு முக கவசம் அணிய வேண்டும். அப்படி முக கவசம் அணிந்தால் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். தண்டையார்பேட்டை, ராயப்பேட்டை மண்டலம் சவாலான பகுதியாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வார்டு வாரியாக கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடததப்பட்டது. தெருத்தெருவாக நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *