வீட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதியானால் மொத்த குடும்பமும் முகாமுக்கு அழைத்துச்செல்லப்படுவர்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் அவர் கூறினார்.

சென்னை, ஜூன்-4

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை இனி அரசின் முகாம்களிலே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக முகாம்களில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதாவது, கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் முகாம்களில் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர். குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அறிகுறி இல்லாதவர்களும் 10 அல்லது 15 நாள்கள் முகாமில் தங்க வைத்து சிகிச்சை பெற்று வீடு திரும்புவர். அதேபோன்று, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, பணிக்கு திரும்புபவர்களை பணியமர்த்த மறுப்பதும், உடல் தகுதி சான்றிதழ் கேட்பதும் சட்டப்படி தவறு. முறையாக புகார் வந்தால், நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *