கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்.. தமிழக அரசுக்கு ஐஎம்ஏ பரிந்துரை..!

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) பரிந்துரை செய்துள்ளது.

சென்னை, ஜூன்-4

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் முதற்கட்ட பரிசோதனைகள் உட்பட கரோனா குணமாகும் வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசுகள் கட்டண வரைமுறை உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அதில், கொரோனா தொற்று ஏற்பட்டு லேசான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கு (10 நாள்களுக்கு சிகிச்சை அளிக்க) ரூ.2,31,820ஐ கட்டணமாக வசூலிக்கலாம். அதன்படி ஒரு நாளைக்கு 23 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலிக்கலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். அதேபோல், கொரோனா தொற்று ஏற்பட்டு கடும் பாதிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு (17 நாள்களுக்கு) ரூ.4,31,411-ஐ கட்டணமாக வசூலிக்கலாம். நாள் ஒன்றுக்கு எனக் கணக்கிட்டால் ரூ.43 ஆயிரத்தை கட்டணமாக வசூலிக்கலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *